சிவகங்கை மாவட்டம் கல்லல் காவல் நிலையத்தில், மணல் கடத்தலைத் தட்டிக்கேட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது திமுக பிரமுகர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லல் அருகே உள்ள சாத்தம்பத்தி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கை காரணமாக, மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.
இதன் தொடர்ச்சியாக, அன்று இரவு கல்லல் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் துரைசிங்கத்திடம், திமுக பிரமுகர் அடைக்கலராஜ் என்பவர் மதுபோதையில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். “இப்பகுதியில் மணல் கடத்துவது எனது தொழில், இதுவரை யாரும் என்னைக் கேள்வி கேட்டதில்லை, நீ வந்ததிலிருந்துதான் பிரச்சினை” என மிரட்டிய அவர், திடீரென எஸ்.ஐ. துரைசிங்கத்தின் கையைப் பிடித்து முறுக்கித் தாக்கியுள்ளார். ஏற்கனவே விபத்து ஒன்றில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த எஸ்.ஐ. துரைசிங்கத்தின் கை, இந்தத் தாக்குதலால் மீண்டும் பலத்த எலும்பு முறிவுக்குள்ளானது.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் அந்த நபரை விட்டுவிடுமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நள்ளிரவில் அவர் காவல் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும், காவல் நிலைய சிசிடிவி கேமராக்களில் பதிவான ஆதாரங்களைச் சமர்ப்பித்து, எஸ்.ஐ. துரைசிங்கம் கடுமையான புகார் அளித்தார்.
சிசிடிவி ஆதாரங்கள் சிக்கியதையடுத்து, மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் மணல் மாபியா அடைக்கலராஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து காவலர் ஒருவரை திமுக பிரமுகர் தாக்கிய இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், காவல்துறையினர் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
