கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 மாவட்டச் செயலாளர்களை பதவியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பெரியார் நகர் பகுதிச் செயலாளர் ‘பெரியார் நகர்‘ இரா.மனோகரன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பூட்டப்பட்ட கட்சி அலுவலகம் – போலீஸ் குவிப்பு
ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும் மொடக்குறிச்சி ஆகிய மூன்று முக்கிய தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மாநகர் மாவட்டத்தில், இந்த திடீர் தலைமை மாற்றத்தால் கட்சிக்குள் மோதல் சூழல் உருவானது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தின் முன்கதவு பூட்டப்பட்டு, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திரண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.வி.ராமலிங்கம்,”அதிமுக என்பது திமுகவை எதிர்ப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு பேரியக்கம். ஆனால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்ததை எங்களால் ஒருபோதும் ஏற்க முடியாது. எங்களது நியாயமான எதிர்ப்பைத் தெரிவித்த காரணத்திற்காக, தன்னிச்சையாக எங்களைப் பதவிகளிலிருந்து பறித்துள்ளனர். இது கட்சி விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது.

இந்த விவகாரம் குறித்து விவாதித்து முடிவெடுக்க உடனடியாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். இதனை வலியுறுத்தி தற்போது ஆதரவாளர்களிடம் கையெழுத்துப் பெற்று தலைமைக்கு அனுப்ப உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் இந்த திடீர் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் காரணமாக ஈரோடு மாவட்ட அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பான சூழல் நீடித்து வருகிறது. அடுத்தகட்டமாக அதிமுக தலைமை என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
