நடிகர் ஜெயம் ரவி (இயற்பெயர்: ரவிமோகன்) மற்றும் ஆர்த்தி தம்பதியினரின் விவாகரத்து அறிவிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி, கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இவர்களது 15 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததற்குப் பல்வேறு காரணங்கள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் அதிகம் பேசப்பட்ட பெயர் பாடகி கெனிஷா பிரான்சிஸ். ஜெயம் ரவியின் நெருங்கிய தோழியான கெனிஷா, தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு, இந்த ஒட்டுமொத்த சர்ச்சையிலும் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரவிமோகன் – ஆர்த்தி கருத்து வேறுபாடும் கெனிஷாவின் வருகையும்
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. குறிப்பாக, ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரின் அதீத தலையீடு காரணமாக ஜெயம் ரவி தனது சொந்த வீட்டிலிருந்து வெளியேறி மும்பையில் தங்கும் சூழல் உருவானதாக ரவி தரப்பில் பேசப்பட்டது. அதே நேரத்தில், தன்னிடம் கலந்தாலோசிக்காமல் ரவி தன்னிச்சையாக விவாகரத்து முடிவை அறிவித்தார் என்று ஆர்த்தி குற்றம் சாட்டினார்.
இந்தக் குடும்பக் குழப்பங்களுக்கு இடையே, மனநல ஆலோசகரும், பாடகியுமான கெனிஷா பிரான்சிஸுடன் ஜெயம் ரவிக்கு நட்பு ஏற்பட்டது. கோவாவில் ரவியும் கெனிஷாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானதை அடுத்து, ஆர்த்தி தரப்பும் சமூக வலைதள விமர்சகர்களும் ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவுக்கு கெனிஷாதான் முக்கியக் காரணம் என ஜோடிக்கப்பட்ட கதைகளைப் பரப்பத் தொடங்கினர். ஆனால், ஜெயம் ரவி இதனை முற்றிலும் மறுத்தார். “கெனிஷா ஒரு மனநல ஆலோசகர், பலரைத் தற்கொலை எண்ணங்களில் இருந்து காப்பாற்றியவர். அவருக்கும் எனது விவாகரத்து முடிவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனது பெயரைப் பயன்படுத்திக் கெனிஷாவின் நற்பெயரைக் கெடுக்க வேண்டாம்” என்று ரவி ஊடகங்களிடம் பகிரங்கமாக விளக்கமளித்திருந்தார்.

இந்த சூழலில், பாடகி கெனிஷா பிரான்சிஸ் வெளியிட்டதாக கூறப்பட்ட சில கருத்துகள், தனது கண்ணியத்திற்கும் தனியுரிமைக்கும் பாதிப்பு ஏற்படுத்தியதாக ஆர்த்தி ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆர்த்தி ரவி குறித்து கெனிஷா பிரான்சிஸ் அவதூறான அல்லது இழிவான கருத்துகளை வெளியிடக் கூடாது என்று கடந்த 13ஆம் தேதியன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.
கெனிஷாவின் உருக்கமான பதிவு: ‘மௌனமே விடை’
இந்த நிலையில் தான், தன்னைச் சுற்றி நடக்கும் இந்த பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கெனிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு நீண்ட விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதில்,
”அனைவருக்கும் வணக்கம்,
நான் சொல்ல வேண்டியதை விடவும், சொல்ல முடிந்ததை விடவும் அதிகமாகப் பேசிவிட்டேன். அதில் பெரும்பாலானவை தேவையற்றவை என்பதும் எனக்குத் தெரிகிறது.
நான் இந்த கதையில் அன்போடு நுழைந்தேன். இப்போது மௌனத்தோடு இதிலிருந்து வெளியேறுகிறேன்.
சில இடங்கள் சத்தம், ஈகோ (அகந்தை), விமர்சனங்கள் மற்றும் ஜோடிக்கப்பட்ட கதைகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அங்கு நற்குணங்கள் சுவாசிக்க இடமில்லாமல் போகிறது. அப்படி நடக்கும்போது, அன்புகூட அங்கு வேண்டாத ஒன்றாக மாறத் தொடங்குகிறது.
உலகம் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்ட ஒரு மனிதரைக் காப்பாற்ற, என்னையே நான் துண்டு துண்டாகக் கொடுத்திருக்கிறேன். ஆனால் இப்போது எனக்கு ஒன்று மிகத் தெளிவாகப் புரிகிறது – இந்த உலகம் காட்சிகளுக்கும் பரபரப்புகளுக்கும் அடிமையாகிக் கிடக்கும் நிலையில், குழப்பங்களுக்கு முன்னால் கருணைக்கு மிக அரிதாகவே வாய்ப்பு கிடைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கெனிஷா விடைபெறக் காரணம் என்ன?
ஜெயம் ரவிக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்த கெனிஷா, கடந்த சில மாதங்களாகத் தன்னைச் சுற்றிப் பின்னப்பட்ட அவதூறு வலைகளாலும், கடுமையான சமூக வலைதள விமர்சனங்களாலும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்பது அவரது தற்போதைய பதிவின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
ஒருபுறம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் சட்டரீதியாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் ஊடகங்களும் பொதுமக்களும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒரு பரபரப்புச் செய்தியாக மட்டுமே அணுகுவதை கெனிஷா உணர்ந்துள்ளார். ஜெயம் ரவிக்கு நேசத்துடனும், அவரது மன அழுத்தத்தைக் குறைக்கும் நல்நோக்கத்துடனும் உதவிய தனக்கு, இந்த உலகம் வெறும் ‘அகந்தை மற்றும் விமர்சனங்களை’ மட்டுமே பரிசாகத் தந்துள்ளது என்ற விரக்தியின் விளிம்பிற்கே அவர் சென்றதன் வெளிப்பாடாகவே அவர் இந்த விடைபெறும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.
