கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களைப் பிடித்து வரலாற்றுச் சாதனை வெற்றி பெற்றது. இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தச் சூழலில், கேரளாவின் 13-வது முதலமைச்சராக மூத்த காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் இன்று அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார்.
திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இன்று காலை நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், கேரள ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் வி.டி. சதீசனுக்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சருடன் சேர்த்து மொத்தம் 20 அமைச்சர்கள் கொண்ட முழு அமைச்சரவையும் இன்று ஒன்றாகப் பதவியேற்றுக் கொண்டது.
இந்த விழாவில் தேசிய அளவிலான முக்கியப் பிரமுகர்கள் மற்றும் கூட்டணித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பதவி விலகிய முன்னாள் முதலமைச்சரும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவருமான பினராயி விஜயனும் இந்த விழாவில் பங்கேற்றார்.
கடந்த 5 ஆண்டுகளாகக் கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைத்து, இந்த இமாலய வெற்றிக்குக் காரணமாக இருந்த 61 வயதான வி.டி. சதீசன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது கேரள அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தமாகப் பார்க்கப்படுகிறது.
