முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று (மே 21) நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘வீர் பூமி’யில் (Vir Bhumi) காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி நெகிழ்ச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1984-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரும், அவரது தாயாருமான இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராஜீவ் காந்தி ஏற்றார். பின்னர், அதே ஆண்டு அக்டோபர் மாதம், தனது 40-வது வயதில் இந்தியாவின் மிக இளம் பிரதமராகப் பதவியேற்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
தொடர்ந்து டிசம்பர் 2, 1989 வரை இந்தியாவின் பிரதமராக அவர் மக்கள் பணியாற்றினார். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவராக ராஜீவ் காந்தி போற்றப்படுகிறார்.
ஆகஸ்ட் 20, 1944 அன்று பிறந்த ராஜீவ் காந்தி, கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21 அன்று தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது, எல்.டி.டி.ஈ (LTTE) தற்கொலைப்படை பயங்கரவாதியால் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 21-ஆம் தேதி அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று அவரது 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அமைதிப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் தங்களது தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
https://x.com/ANI/status/2057285865488175148
அந்தவகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மலர் தூவி தனது தந்தைக்கு நெகிழ்ச்சியுடன் அஞ்சலி செலுத்தினார். இவருடன் தாய் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் உடனிருந்தனர்.
இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் காலையிலேயே நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களது மரியாதையை செலுத்தினர்.
