இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களின் செல்வாக்கு குறித்து பிரபல ஆய்வு நிறுவனமான ‘ஆர்மேக்ஸ் மீடியா’ (Ormax Media) புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் பல மாதங்களாகத் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நடிகர் விஜய், தற்போது சரிவைச் சந்தித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஆர்மேக்ஸ் மீடியா வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடத்தில் நீடித்து வந்தார். ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய பட்டியலில் அவர் தனது முதலிடத்தை இழந்து, 4-வது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் முழுநேர அரசியலில் களம் இறங்கியுள்ளதாலும், சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்ததாலும், வட இந்திய மற்றும் பிற மொழி ரசிகர்களிடையே சினிமா ரீதியான அவரது செல்வாக்கு சற்றே சரிந்துள்ளதாகத் திரைத்துறை நோக்கர்கள் கருதுகின்றனர்.
விஜய் முதலிடத்தை இழந்ததைத் தொடர்ந்து, பான்-இந்தியா ஸ்டாரான பிரபாஸ் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். பிரபாஸைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் ‘புஷ்பா’ திரைப்பட புகழ் அல்லு அர்ஜுன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
சினிமா மார்க்கெட்டில் தொடர்ந்து பெரிய பட்ஜெட் மற்றும் பான்-இந்தியப் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கே ஆர்மேக்ஸ் பட்டியலில் முன்னுரிமை கிடைத்து வருகிறது. விஜய் தற்போது தனது கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பணிகளை முடித்துவிட்டு முழுமையாகத் தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருவதால், இந்தத் தரவரிசை மாற்றம் இயல்பான ஒன்றுதான் என்றும் சினிமா விவரமறிந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
