கர்நாடக மாநில முதல்வரும் சரி, துணை முதல்வரும் சரி அவர்களது மாநிலத்திற்கு உண்மையாக இருக்கிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, மேகதாது அணை திட்டத்துக்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சொந்த நீர் வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி தன்னிறைவு பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மாநிலத்தின் இயற்கை வளங்களிலும் உரிமை கொண்டாட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சீமான், “தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 950 டிஎம்சி மழை பெய்கிறது. மொத்த நீர் வளம் சுமார் 4,000 டிஎம்சியாக உள்ள நிலையில், தற்போது வெறும் 1,500 டிஎம்சி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 2,500 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது.
இந்த நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்த 2,500 டிஎம்சியில் மேலும் 1,500 டிஎம்சியைச் சேமித்தால், கர்நாடகாவிடம் 150 டிஎம்சிக்காக கெஞ்ச வேண்டிய அவசியமே இருக்காது” என்று தெரிவித்தார். நீர் மட்டுமல்ல, நிலக்கரி, கனிம வளங்கள் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களிலும் தமிழகம் தன் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “நெய்வேலி பழுப்பு நிலக்கரி உனக்கு இல்லை, உன் வளம் உனக்கு, உன் நீர்வளம் உனக்கு, உன் நிலவளம் உனக்கு என்றால், என் நிலவளம் எனக்கு என்றுதானே அர்த்தம். இதற்காக சண்டை செய்ய ஒரு வீரன் தேவை. அதற்கு நீங்கள் ஏன் இல்லை?” என்று தமிழக அரசியல் தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் பங்கை விமர்சித்த சீமான், “பூட்டு அங்கே இருக்கலாம், ஆனால் சாவி நம்மிடம் இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்” என்றார். இதற்கு உதாரணமாக, முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ் (என்.டி.ஆர்.) அவர்களைச் சுட்டிக்காட்டினார். இந்திரா காந்தி ஆதிக்கம் செலுத்திய காலத்தில், ஒரே இரவில் மத்திய அரசு அலுவலகங்களைப் பூட்டி சாவியை எடுத்து வந்ததாகவும், பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி திறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். “அப்படி ஒரு தலைவர் தமிழகத்துக்கு தேவை. சும்மா எல்லாவற்றுக்கும் காலில் விழுந்து கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.
கர்நாடக முதல்வரும் துணை முதல்வரும் தங்கள் மாநில நலனுக்கு உண்மையாக இருப்பதைப் பாராட்டிய சீமான், தமிழக தலைவர்களிடம், “நீங்கள் உங்கள் மாநிலத்துக்கு உண்மையாக இருக்கிறீர்களா? மக்கள் உங்களுக்கு வாக்கு அளித்து அதிகாரத்தில் அமர வைத்தார்கள். ஆனால் நீங்கள் ‘இந்தியாவைக் காப்பாற்றப் போகிறேன்’ என்று சொல்கிறீர்கள். இது சரியா?” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தின் நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண, மேகதாது போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, மாநிலத்தின் சொந்த வளங்களை முழுமையாகப் பயன்படுத்தும் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்ந்து அரசியல் விவாதப் பொருளாக இருக்கும் நிலையில், அவரது இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் அரங்கில் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றுள்ளன.
