டாஸ்மாக் ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாகவும், படிப்படியாக அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் உள்ள புகழ்பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து அமைச்சர் விக்னேஷ் வழிபட்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர், டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆட்சியில் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்ட முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி 10 ரூபாய் மட்டும் திரும்பப் பெரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் குறித்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை லஞ்சம் மற்றும் ஊழல் செய்பவர்களுக்கு மட்டுமே கடுமையானதாக இருக்கும்; துறையில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் உறுதியாக தெரிவித்தார்.
கோவையைச் சிறந்த மாநகரமாக மாற்ற, கிராமப்புறங்கள் வரை அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் இதற்காக முதலமைச்சர் விஜய், கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டங்களைக் கொண்டு வர பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மின் கட்டணம் தொடர்பான பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினரின் பிரச்சனைகளும் அரசின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகவும், அவை விரைவில் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
