திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
வைகாசி விசாகத் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் மலைக்கோயிலுக்குச் செல்லும் வின்ச் ரயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மலைக்கோயிலில் உள்ள பொதுதரிசன வழி மற்றும் கட்டண தரிசன வழிகள் என அனைத்துப் பாதைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்திப் பரவசத்துடன் மூலவர் தண்டாயுதபாணி சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் பழனி நகர் மற்றும் மலைக்கோயில் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் நிழற்பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
