இந்தியாவின் ராணுவ வலிமை மற்றும் அதன் நவீனமயமாக்கல் முயற்சிகளை அமெரிக்கா பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் பாராட்டியுள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத், உலக அரங்கில் இந்தியா ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார். இந்தியா தனது முப்படைகளையும் நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தி வருவது, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் பலமாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் ராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் முயற்சியை வரவேற்பதாகவும், இது இந்தியாவின் தற்சார்பு நிலையை வலுப்படுத்துவதாகவும் ஹெக்செத் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வளர்ந்து வரும் ராணுவத்திறன், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா ஒரு நம்பகமான மற்றும் வலிமையான கூட்டாளியாகத் திகழ்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இராணுவ ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் அதிகரித்து வருவதாகவும், வரும் காலங்களில், குறிப்பாகக் கடற்படைப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்புத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியா உலக அரங்கில் பெற்று வரும் ராணுவ ரீதியான இந்த அங்கீகாரம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை மேலும் பலப்படுத்தும் என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
