போர் பகுதிகளில் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படும் நாடுகள் மற்றும் அமைப்புகளின் பட்டியலில், இஸ்ரேலிய அதிகாரப்பூர்வ அமைப்புகளையும் சேர்த்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் சிறைச்சாலை சேவை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பாலஸ்தீன கைதிகள் மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மீது திட்டமிட்டு பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போர் நிலவும் பகுதிகளில் பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதை எதிர்த்து ஐநா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஏற்கனவே ஹமாஸ் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது இஸ்ரேலிய அமைப்புகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
ஐநா-வின் இந்த அறிவிப்பை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்துள்ளது. ஐநாவின் இந்த நடவடிக்கை “அறநெறிக்கு மாறானது” என்றும், இது ஒருதலைப்பட்சமான முடிவு என்றும் இஸ்ரேலிய தூதர் டேனி டானோன் (Danny Danon) கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அலுவலகத்துடனான உறவுகளைத் துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காசா மற்றும் மேற்குக் கரைப் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளால் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், வலுக்கட்டாயமாக ஆடைகளை அகற்றச் செய்தல் மற்றும் சித்திரவதைகள் குறித்து ஐநா குழுக்கள் தொடர்ந்து ஆதாரங்களைச் சேகரித்து வந்தன.
ஒரு நாடு அல்லது அமைப்பு இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அது குறைந்தபட்சம் ஓராண்டுக்கு கண்காணிப்பில் வைக்கப்படும். இது சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதே சமயம், இஸ்ரேல் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்தி, இந்த அறிக்கையை ஒரு ‘அவதூறு பிரச்சாரம்’ என்று நிராகரித்துள்ளது.
