வங்கதேசத்தில் டிரம்ப் என்று செல்லமாகப் பெயரிடப்பட்ட 700 கிலோ எடை கொண்ட அல்பினோ வகை எருமை, பக்ரீத் பண்டிகையின் போது பலியிடப்பட இருந்தநிலையில், கடைசி நிமிடத்தில் வங்கதேச அரசால் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த எருமையின் தலையில் இருக்கும் அடர்த்தியான தங்க நிற முடிகள் மற்றும் அதன் முக அமைப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிகை அலங்காரத்தைப் போலவே இருப்பதால், சமூக வலைதளங்களில் இது மிகவும் பிரபலமானது. இதன் புகைப்படங்களும், காணொளிகளும் இணையத்தில் காட்டுத்தீ போல பரவின. இதனைப் பார்ப்பதற்காகவே நூற்றுக்கணக்கான மக்கள் பண்ணைக்குத் திரண்டனர். ஈரானிய சமூக வலைதளக் கணக்குகள் கூட இந்த எருமையை வைத்து வேடிக்கையான கருத்துகளைப் பகிர்ந்தன.
பக்ரீத் பண்டிகையின் போது பலியிடுவதற்காக ஒருவர் இந்த எருமையை விலைக்கு வாங்கியிருந்தார். ஆனால், இந்த எருமை பொதுமக்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியதாலும், அதன் தனித்துவமான தோற்றத்தாலும், பலியிடப்படுவதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டது.
அரசாங்கத்தின் உத்தரவுப்படி, எருமையை வாங்கியவருக்குப் பணம் திருப்பி அளிக்கப்பட்டு அல்லது அதற்கு மாற்றாக மற்றொரு விலங்கு வழங்கப்பட்டு, அந்த எருமை டாக்காவில் உள்ள தேசிய விலங்குத் தோட்டத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.
விலங்குத் தோட்டத்தில் இந்த எருமைக்குத் தனி கொட்டகை மற்றும் பராமரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு அரிய வகை அல்பினோ எருமை என்பதால், இதைச் சிறப்பாகப் பாதுகாக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
