உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து கூட பக்தர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தருவர்.
கோடை விடுமுறையை ஒட்டி பக்தர்கள் லட்சக்கணக்கில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். பெருமளவில் பக்தர்கள் தங்களது வாகனங்களில் தரிசனத்திற்கு வருவதால் அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்கின்றன.
நேற்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதனால் பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை தரிசனத்திற்காக வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். அவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் உணவு, குடிநீர், பால், டி, காபி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அவசர உதவிக்காக நடமாடும் மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் சுமார் 34,569பேர் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அதேப் போல 46,292 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இவர்கள் மூலம் சுமார் ரூ.3.80கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அத்தோடு மேற்கொண்டு பணம் செலுத்தி பக்தர்கள் தங்களுக்கு தேவையான லட்டுகளை பெற்று செல்லலாம். அப்படி நேற்று ஒரே நாளில் சுமார் 4.15லட்சம் லட்டுக்கள் விற்பயனையாகி இருக்கிறது.
