கேரளாவில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள வி.டி. சதீசன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது. கேரள சட்டப்பேரவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆற்றிய அரசின் கொள்கை விளக்க உரையில் இந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அரசின் ‘மாதவிடாய் கண்ணியம்’ (Project Menstrual Dignity) திட்டத்தின் கீழ், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களை பெண்களுக்கு உகந்ததாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவிகளுக்கு மாதம் 3 நாட்கள் வரை மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில், விடுமுறையால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, வார இறுதி நாட்களில் ‘சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மகப்பேறு நலச் சட்டத்தின்படி, 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அனைத்து பொது அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் நிறுவனங்களில் பாதுகாப்பான, உயர்தர குழந்தைப் பராமரிப்பு மையங்கள் அமைப்பது கட்டாயமாக்கப்படும்.
அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும். மேலும், சம வேலைக்கு சம ஊதியம் உறுதி செய்யப்படும்.
கேரளாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பொது கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும். பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள், காலணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எளிதாகக் கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அனாதைகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லாத கேரளா” என்ற இலக்கை அடைய, குழந்தை தத்தெடுப்பு பிரச்சாரங்கள் ஊக்குவிக்கப்படும். சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ், பயிற்சி அளிக்கப்பட்ட மற்றும் நல்ல ஊதியம் பெறும் வளர்ப்பு குடும்பங்களின் நெட்வொர்க் உருவாக்கப்பட்டு, இந்தியாவின் முதல் அனாதைகள் இல்லாத மாநிலமாக கேரளா மாற்றப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கேரளாவை நாட்டின் மிகச் சிறந்த ‘பெண்களுக்கு உகந்த மாநிலமாக’ மாற்றுவதே இந்த அரசின் நோக்கம் என்று ஆளுநரின் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த முற்போக்கான அறிவிப்புகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
