மாற்றுத்திறனாளி தடகள வீரரை சக வீரரே சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற 8வது இந்திய திறந்தநிலை பாரா தடகள சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீட்டர் சுற்ற்ல் கலந்து கொண்ட சிராக் தியாகி தங்கப்பதக்கம் வென்றார்.
இதன்மூலம் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த 25 வயதான தியாகி, ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஆசிய பாரா தடகள விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றார். புதன்கிழமை காலை தியாகி தனது விடுதிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் தியாகியை போலீசார் தேடி வந்தனர். சனிக்கிழமை காசியாபாத்தின் சாய் குஞ்ச் பகுதியில் தியாகியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். முதற்கட்ட ஆய்வில் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மாற்றுத்திறனாளி தடகள வீரரான யஷ் கத்திக் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், “ஆவணங்கள் சரிபார்ப்பின்போது எனக்கு எதிராக தியாகி புகார் அளித்ததால் நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன்; இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் அவரை தனியாக கூட்டிச் சென்று முதுகில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
