வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ காஸ் சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்து ரூ.3283க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதத்தில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் மாதந்தோறும் காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருவதால், உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் கடந்த மார்ச் மாதம் ரூ.144ம், ஏப்ரல் மாதம் 203 ரூபாயும் அதிகரித்து இருந்தது.
அதேபோல், மே 1ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.993 அதிகரித்து ரூ. 3,239 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஜூன் மாதத் துவக்கமான இன்று எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளன. இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிகப்பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.46 அதிகரித்து, ரூ.3,283க்கு விற்பனையாகிறது.
வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட போதிலும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வணிக சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஹோட்டல்களில் உணவுகளின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
