கடந்த 2022 ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக நிர்வாகி வைரமுத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தடை விதிக்க மறுத்து விட்டார்.
அந்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை மட்டும் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
ஜூன் 23 ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரித்ததுடன், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடத்தப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது, ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
2022 ம் ஆண்டு ஜூலை 11 ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து பொதுச் செயலாளர் பதவி உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன.
பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் திமுகவிலும்; ஜே சி டி பிரபாகரன் தவெகவிலும் இணைந்துள்ள நிலையில், இந்த உரிமையியல் வழக்குகளை திரும்ப பெற அனுமதி கோரி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் உயர் நீதிமன்ற பதிவு துறைக்கு கடிதங்கள் அளிக்கப்பட்டு இருந்தன.
அதன் அடிப்படையில் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த உரிமையியல் வழக்குகள், திரும்பப் பெறுவதற்கான தலைப்பில், நீதிபதி குமரேஷ் பாபு முன் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த கடிதங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படாததால் வழக்கின் விசாரணையை நீதிபதி நாளை தள்ளி வைத்துள்ளார்.
இதே போல கட்சி நடவடிக்கைகளில் தலையிடவும், கட்சியின் கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தவும் பன்னீர்செல்வம் தரப்பினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கும் திரும்ப பெறுவதற்காக பட்டியலிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பன்னீர்செல்வம் தரப்பினருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளார்.
