தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 50 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்டகால சட்டப்போராட்டத்திற்குப் பிறகு 2020ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அந்த ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், 2025-26 கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் காலியாக உள்ள இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளதாகவும், இதன் மூலம் அரசு மருத்துவர்களின் உயர்கல்வி வாய்ப்பு மீண்டும் பாதிக்கப்படுவதாகவும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது வெறும் கல்வி வாய்ப்பு மட்டுமல்ல; மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய கொள்கை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, அரசு மருத்துவர்களின் உரிமையையும் மாநிலத்தின் சுகாதார நலனையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், நீட் தேர்வு முறையையும் விமர்சித்துள்ள சீமான், அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படக் கூடாது என்றும், தமிழகத்தின் உரிமைகளை மாநில அரசு உறுதியாக காக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
