நாடு முழுவதும் தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகத்தை மணிக்கு 110 கிலோமீட்டரிலிருந்து 130 கிலோமீட்டராக உயர்த்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் ரயில்களின் பயண நேரம் கணிசமாகக் குறைவதோடு, ஆண்டுக்கு சுமார் 40 முதல் 45 கோடி பயணிகள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக, நவீன ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எச்.பி (LHB) பெட்டிகளுடன் இயங்கும் 350 முதல் 400 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த பெட்டிகள் 160 கி.மீ வேகம் வரை பாதுகாப்பாகச் செல்லும் திறன் கொண்டவை.
தற்போது ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் மற்றும் துரந்தோ போன்ற பிரீமியம் ரயில்கள் மட்டுமே 130 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. இனி சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களும் இந்த வேகத்தில் இயங்கவுள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளுக்கு, இந்த வேக அதிகரிப்பு மூலம் பயண நேரத்தில் பல மணி நேரம் மிச்சமாகும்.
இந்த அதிவேக ரயில் இயக்கத்தை சாத்தியமாக்க, இந்திய ரயில்வே நாடு முழுவதும் விரிவான ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், தண்டவாளங்கள் பலப்படுத்தப்பட்ட, நவீன மின்னணு இன்டர்லாக்கிங் (Electronic Interlocking) சிக்னல் சிஸ்டம் அமைக்கப்பட்ட பாதைகள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
வேகம் அதிகரிப்புக்கு ஏற்ப, ரயில்கள் வந்து செல்லும் நேரங்களை மாற்றி அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இது ரயில்களின் துல்லியமான இயக்க நேரத்தை மேம்படுத்தும்.
இந்த வேகம் உயர்வு என்பது இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். கடந்த சில ஆண்டுகளாக, வந்தே பாரத் ரயில்களின் அறிமுகம், ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு, அதிவேக சரக்கு வழித்தடங்கள் மற்றும் 100% மின்மயமாக்கல் போன்ற பல்வேறு திட்டங்களில் ரயில்வே துறை பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது.
இனி சாதாரண கட்டணத்தில் பயணிக்கும் நடுத்தர மக்களும் பிரீமியம் ரயில்களின் வேகத்தில், மிகக் குறைந்த நேரத்தில் தங்கள் இலக்கை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
