அயோத்தி ராமர் கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்தும் பக்தர்கள் தொடர்ந்து வாரி வழங்கி வரும் நிலையில், இதுவரை வந்துள்ள மொத்த நன்கொடை ரூ.3,000 கோடியைத் தாண்டியுள்ளது. கோவில் கட்டுமானப் பணிகள் மற்றும் அதன் நிர்வாகம் குறித்த நிதி விவரங்களை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தற்போது வெளியிட்டுள்ளது.
நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? வரி எவ்வளவு? ராமர் கோவில் வளாக கட்டுமானப் பணிகளுக்கான மொத்த திட்ட மதிப்பு சுமார் ரூ.1,800 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை கிட்டத்தட்ட ரூ.1,600 கோடி கட்டுமானப் பணிகளுக்காகச் செலுத்தப்பட்டுவிட்டது.
இந்த பிரம்மாண்ட திட்டத்தின் மூலம் அரசுக்குக் கணிசமான வருவாய் கிடைத்துள்ளது. கோவில் அறக்கட்டளை சார்பில் இதுவரை சுமார் ரூ.396 கோடி வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள நிதி கோவில் வளாகப் பராமரிப்பு, அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம், பிரசாதம் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
தங்கம், வெள்ளிப் பொருட்கள் என்ன செய்யப்படுகின்றன?
பக்தர்கள் பணமாக மட்டுமின்றி தங்கம், வெள்ளி, நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களையும் காணிக்கையாக அளித்து வருகின்றனர். இவற்றை மதிப்பிட்டு, பாதுகாக்கும் பொறுப்பு இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்’ (SPMCIL) அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் காணிக்கையாக முடங்குகிறது. இதை மேலாண்மை செய்ய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியுடன் அறக்கட்டளை ஒப்பந்தம் செய்துள்ளது. கோவில் வளாகத்திற்குள்ளேயே எஸ்பிஐ வங்கி அதிநவீன பணம் எண்ணும் இயந்திரங்களை நிறுவியுள்ளது.
தினமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு, சிசிடிவி கண்காணிப்பில் வங்கி அதிகாரிகள் மற்றும் அறக்கட்டளை பிரதிநிதிகள் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டு, பெட்டிகளில் அடைக்கப்பட்டு வங்கிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. சில நாட்களில் காணிக்கை அதிகமாக இருக்கும்போது, அன்றைய தினமே எண்ணி முடிக்க முடியாமல் பைகளில் சீல் வைக்கப்பட்டு அடுத்த நாள் எண்ணப்படுகிறது.
இதற்கிடையே, ராமர் கோவில் காணிக்கை விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வைத்துள்ள குற்றச்சாட்டு உத்தராகண்ட் மற்றும் உபி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. “ராமர் கோவிலுக்குப் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் பல கோடி ரூபாய் காணாமல் போயுள்ளதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இது அறக்கட்டளைக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து விளக்கம் அளிக்க யாரும் முன்வரவில்லை.
உலகெங்கும் உள்ள சனாதன மக்களின் நம்பிக்கையோடு விளையாடும் இந்த விவகாரத்தை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். அரசின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என அகிலேஷ் சாடியுள்ளார்.
அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டுக்கு உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பாதக் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஒருபோதும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்ததே இல்லை. அவரது மூளை இன்னும் பாபர் காலத்து சிந்தனையில்தான் இயங்குகிறது. ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியபோதோ, அயோத்தி பிரம்மாண்டமாக உருவெடுத்தபோதோ அவர் வாயே திறக்கவில்லை. இப்போது திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புகிறார். சனாதன தர்மத்திற்கு எதிராகச் செயல்படும் சமாஜ்வாதி கட்சிக்கு 2027 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று பிரஜேஷ் பாதக் எச்சரித்துள்ளார்.
