பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள “சிங்கப் பெண்கள்” சிறப்பு அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மே 10ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய் அறிவித்த திட்டங்களில் ஒன்று ‘’சிங்கப் பெண்’’ அதிரடிப் படை. குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக ‘’சிங்கப் பெண்’’ சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்ற ஆணையில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். ஒரு காவல் கண்காணிக்காணிப்பாளர், 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். காவலர் உடையில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக ‘’சிங்கப் பெண்’’ அதிரடிப் படைக்கு என சிறப்பு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அதிரடிப் படையை கடந்த மே மாதம் 29ம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக இந்த திட்டம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், “சிங்கப் பெண்கள்” சிறப்பு அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நாளை மாலை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
