பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதால் அவரைப் பற்றி பேச ஒன்றும் இல்லை என்றும் அவரை பாஜக ஆதரிக்காது என்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஜூன் 2ம் தேதி டெல்லி சென்ற தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தனது விலகல் குறித்து அண்ணாமலை விளக்கமளித்தார்.

இதையடுத்து, ஜூன் 5ம் தேதி அண்ணாமலையின் விலகலை அதிகாரப்பூர்வமாக பாஜக அறிவித்தது. அன்றைய தினம், தனது புதிய அரசியல் இயக்கத்தை அறிவித்தார் அண்ணாமலை. “We The Leaders” என்ற பெயரில் தொடங்கி உள்ள புதிய அரசியல் இயக்கத்தில் இணைபவர்களுக்கான இணைதள முகவரியையும் அவர் அறிவித்தார்.
இந்தநிலையில், அண்ணாமலையில் புதிய அரசியல் இயக்கத்தில் தமிழக பாஜகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்தனர். அண்ணாமலையின் புதிய இயக்கத்தால் பாஜகவிற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லையென்றும், அவரின் இயக்கத்தில் பாஜகவினர் யாரும் இணைய வேண்டாம் என்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டார். இந்தநிலையில், அண்ணாமலையின் கட்சி விலகல் அறிவிப்புக்கு பிறகான அவரின் அரசியல் செயல்பாடுகள் குறித்து பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பின்.
இதற்கு பதிலளித்த அவர், அண்ணாமலை போன்ற இளைஞர்கள் தேச நலனில் பணியாற்ற எல்லா வழிகளையும் பாஜக வழங்கியதாக தெரிவித்தார். பாஜகவுடன் அவர் பயணித்த காலத்தில் அவரின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பளித்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். சில காரணங்களால் அவர் பாஜகவில் இருந்து விலகியநிலையில், அவரின் தனிப்பட்ட கருத்துக்களையும், செயல்பாடுகளையும் ஆதரிக்கப் போவதில்லை என்று நிதின் நபின் கூறினார். பாஜகவை பொருத்தவரை கட்சியே பிரதானம் என்றும், கட்சியில் இருந்து விலகியரைப் பற்றி இனி பேச ஒன்றும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
