இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா நேற்று (ஜூன் 10) காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திரைத்துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிலையில், பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், இயக்குனர் பாரதிராஜா மறைவு வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்த பாரதிராஜாவின் அர்ப்பணிப்பு தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியது என்றும் கிராமப்புற வாழ்வியலை மிக அழகாக காட்சிப்படுத்தியவர் பாரதிராஜா என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் தனது எண்ணங்கள் இணைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
