அனைவரின் ஆசீர்வாதங்களுடன் இந்த முக்கியமான அடியை தான் எடுத்து வைப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், தேர்தல் தொடர்பான வதந்திகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட உள்ளதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
முதலில் ஜூன் 11-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தனது முடிவை அறிவிக்க இருப்பதாக ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். ஆனால், பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு காரணமாக அந்த அறிவிப்பை ஒரு நாளுக்கு ஒத்திவைப்பதாக பின்னர் தெரிவித்தார். இதையடுத்து இன்று தனது முக்கியமான முடிவை வெளியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி கடமையை நேர்மையாகச் செய்வதே வாழ்க்கையின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது அடுத்த கட்ட பயணத்தில் மக்களின் ஆலோசனையும் வழிகாட்டுதலும் மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.
அரசியலில் நுழைவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்றும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றோ தமக்கு விருப்பம் இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தாம் நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவர் அரசியலில் ஈடுபட்டால், தனிநபராகச் செய்து வரும் சமூகப் பணிகளை விட பெரிய அளவில் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது எண்ணமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைய சூழ்நிலைகள் தன்னை அரசியல் களத்திற்கு வர வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் காணொளியில், அரசியல் குறித்த தனது பார்வை, தனது வாழ்க்கையில் அரசியல் எப்படி இடம்பிடித்தது, அரசியல் தொடர்பாக தனது தாயார் கொண்டிருந்த எண்ணங்கள் மற்றும் தனது வாழ்க்கைப் பயணத்தை மாற்றிய முக்கிய சம்பவங்கள் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தக் காணொளியை முழுமையாகக் கண்டு தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தனது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமையக்கூடிய இந்த முடிவை எடுக்கும் தருணத்தில், அனைவரின் ஆசீர்வாதமும் ஆதரவும் தனக்கு தேவை என்றும் ராகவா லாரன்ஸ் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
அவரது இந்த அறிவிப்பு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவர் அரசியலில் நேரடியாக களமிறங்குகிறாரா, அல்லது வேறு வகையான அரசியல் பொறுப்பை ஏற்கிறாரா என்பது குறித்து அவரது காணொளி வெளியான பின் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
