கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை முகாம்களை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அரசு மற்றும் விஸ்வேஷ்வரயா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (VTU) இணைந்து இந்த சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துகிறது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கான பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி. தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. 2023–24-ஆம் ஆண்டில் 44,500 பேராக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, 2025–26-ஆம் ஆண்டில் 66,600 ஆக உயர்ந்துள்ளது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தகவலின்படி, எச்.ஐ.வி. பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 2.60 லட்சம் பேர் எச்.ஐ.வி.யுடன் வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் 54 ஆயிரம் பேருக்கு தங்களுக்கு தொற்று இருப்பதே தெரியாமல் இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், க்யூஆர் (QR) குறியீடு அடிப்படையிலான டிஜிட்டல் அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை ரகசியமாக பதிவு செய்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற முடியும்.
அதே நேரத்தில், பரிசோதனை முகாம்கள் கல்லூரிகளில் நடத்தப்படுவது கட்டாயமாக இருந்தாலும், எந்த மாணவரின் சம்மதமும் இல்லாமல் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ளப்படாது என்று மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இளைஞர்களிடையே விழிப்புணர்வை அதிகரித்து, ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
