பாகிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து ஆழமான நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், புதிய ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் சுமார் 2.7 கோடி மக்கள் புதிதாக வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதனால், நாட்டில் வறுமையில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டியுள்ளது.
சுமார் 25.9 கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானில், தற்போது 28.9 சதவீத மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். 2018-19ஆம் நிதியாண்டில் வறுமை விகிதம் 21.9 சதவீதமாக இருந்தது. அதாவது, ஆறு ஆண்டுகளில் வறுமை விகிதம் ஏறத்தாழ 7 சதவீதம் உயர்ந்துள்ளது. அன்றாட உணவு, உடை, தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே மக்கள் போராடும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, பலுசிஸ்தான் மாகாணம் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு சுமார் 47 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
வேலைவாய்ப்பின்மை, முதலீடுகளின் பாரிய சரிவு, அரசின் வளர்ச்சித் திட்டங்களின் மந்தகதி ஆகியவை இந்த மாகாணத்தின் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தியுள்ளன. பிற மாகாணங்களிலும் நிலைமை சவாலானதாகவே உள்ளது.அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, உயர் பணவீக்கம், பாகிஸ்தான் ரூபாயின் தொடர் மதிப்பிழப்பு, சர்வதேச அரசியல் பதற்றங்கள் ஆகிய காரணிகள் மக்களின் வாங்கும் திறனை பெருமளவு குறைத்துள்ளன. உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பது, நடுத்தர வர்க்கத்தினரையும் வறுமையை நோக்கி தள்ளியுள்ளது.
மேற்காசியப் பகுதியில் நிலவும் பதற்றச் சூழல் பாகிஸ்தானின் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீட்டை பாதித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பாகிஸ்தான் அரசு விரைவில் தனது ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், இந்த அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தொடர்ந்து வரும் அரசியல் அமைதியின்மை, வெளிநாட்டுக் கடன் சுமை மற்றும் வருவாய் பற்றாக்குறை ஆகியவை பொருளாதார மீட்சியை தடுத்து வருகின்றன. IMF போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியை நாடும் நிலையில், உள்நாட்டு சீர்திருத்தங்கள் மிக அவசியமாகின்றன.
ஆய்வாளர்கள், வறுமையைக் கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், முதலீட்டை ஈர்க்கவும் அரசு உடனடி மற்றும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இல்லையெனில், சமூக அமைதியின்மை மற்றும் அரசியல் பதற்றம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய நிலை, அண்டை நாடுகளுக்கும் பாடமாக அமைய வேண்டும். பொருளாதார நிலைத்தன்மைக்கு நீண்டகாலத் திட்டமிடல், நல்லாட்சி மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பு ஆகியவை இன்றியமையாதவை.
