கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி வெடித்துள்ளது. அமைச்சர் பதவி கிடைக்காத சில எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா மிரட்டல் விடுத்துள்ளதால் கர்நாடகா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலமைச்சராக பதவியேற்ற டி.கே. சிவக்குமார், 13 அமைச்சர்களுடன் ஆட்சியைத் தொடங்கியிருந்தார். தற்போது அமைச்சரவையில் இருந்த 20 காலியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. புதியதாக பதவியேற்ற 20 அமைச்சர்களில் 9 பேர் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையில் இடம்பெறாததால் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட யஷ்வந்த்ராய்கவுடா பட்டீல் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். “40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். அமைச்சரவை வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மிகவும் மனவேதனை அடைந்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பெளலூர் கோபாலகிருஷ்ணாவும், தன்னை அமைச்சராக்காததால் எம்.எல்.ஏ. பதவியுடனும் மாநில வனத்துறை தொழில் கழகத் தலைவர் பதவியுடனும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். “முதல்வர் அல்லது அமைச்சர்களின் வாரிசுகளுக்கே வாய்ப்பு கிடைக்கிறது” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த அதிருப்தி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், “கட்சியில் ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அனைவருக்கும் ஒரே நேரத்தில் அமைச்சரவைப் பொறுப்பு வழங்க இயலாது. முன்பு சித்தராமையா அமைச்சரவையில் எனக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை; பின்னர் அமைச்சர் ஆனேன். அதுபோல எதிர்காலத்தில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்” என்றார்.
இதற்கிடையில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதிக்கம் அமைச்சரவை அமைப்பிலும் பிரதிபலித்துள்ளது. 33 அமைச்சர்களில் 21 பேர் ஏற்கனவே சித்தராமையா அமைச்சரவையில் பணியாற்றியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். மல்லிகார்ஜுனை அமைச்சரவையில் சேர்க்கும் வகையில் கடைசி நேரத்தில் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டதாகவும், அமைச்சராக்கப்படாவிட்டால் கட்சியை விட்டு விலகுவேன் என அவர் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை வாய்ப்பு கிடைக்காததால் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
