தவெக ஆட்சியில் தொழில் முதலீடுகள் பெரும் வீழ்ச்சியை சந்திப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகியிருக்கும் 2027-ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டின் முதலீட்டுத் தரவுகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பெரிய வீழ்ச்சியைக் காட்டுவதாகவும்,. மற்ற மாநிலங்களில் புதிய ஆட்சிகள் தொடங்கியவுடன் முதலீடுகள் பல மடங்கு உயர்ந்துள்ள வேளையில், தமிழகத்தில் முதல்வர் விஜய் அரசு பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்த முதலீடுகள் முந்தைய காலாண்டைக் காட்டிலும் 74.5 சதவீதமும், தனியார் முதலீடுகள் 77.63 சதவீதமும் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் எக்ஸ்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட திட்டங்களில் வெறும் ரூ. 11,237 கோடியை மட்டுமே பெற்று, தேசிய அளவில் தமிழகம் 17-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் அவர்களிடம் போதிய திட்டமிடல் இல்லாததும், புதிய முதலீட்டாளர்களைக் கவரும் கொள்கைகள் தவெக அரசிடம் இல்லாததுமே இத்தகைய வீழ்ச்சிக்குக் காரணம் எனவும், இதனால், தமிழகத்திற்கு வர வேண்டிய வெளிநாட்டுத் தனியார் முதலீடுகளும் ரூ. 2,080 கோடியிலிருந்து ரூ. 720 கோடியாகக் குறைந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
வெறும் விளம்பரப் பேச்சுகளாலும், ரீல்ஸ்களாலும் மட்டும் புதிய முதலீடுகளைக் கொண்டுவர முடியாது என்பதை தவெக அரசுக்கு இந்தத் தரவுகள் தெளிவாக உணர்த்தியிருப்பதாகவும், எனவே, முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகச் சரியான தொழில் கொள்கைகளை உருவாக்கி, சரிந்துவரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் எனவும், இல்லையேல், நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும் என்றும் அரசுக்கு நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாகத் தெரிவித்துள்ளார்.
