ஆறுகளில் விளையாடி, நீரில் மூழ்கித் தத்தளிக்கும் உயிர்களைப் பார்க்கும்போது, ஒரு சிறுமியின் மனதுக்குள் எழுந்த தீப்பொறிதான், இன்று மாநிலத்தையே சிந்திக்க வைத்திருக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ரனா பாத்திமா! மற்ற குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடும் வயதில், மற்ற குழந்தைகளின் உயிரைக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகப் போராடி வருகிறாள்.
மூன்று வயதிலேயே ஆற்றில் துணிச்சலாக நீந்தி சமூக வலைதளங்களில் வைரலான இந்தச் சிறுமிக்கு, நீர்நிலை என்பது அச்சம் அல்ல, அது ஒரு திறன். ஆனால், தன் கண் முன்னால் பல குழந்தைகள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழப்பதைக் கண்டு துடித்த ரனா, அமைதியாக இருக்க விரும்பவில்லை.
‘எந்தக் குழந்தையும் நீரில் மூழ்கி இறக்கக்கூடாது’ என்ற உறுதியோடு, கடந்த 2023-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, தனது கோரிக்கையை முன்வைத்தது ஒட்டுமொத்த கேரளாவையும் வியக்க வைத்தது. ஒரு நீச்சல் குளம் கேட்டுத் தொடங்கிய அந்தச் சிறுமியின் குரல், இன்று ‘அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாய நீச்சல் பயிற்சி வழங்கப்பட வேண்டும்’ என்ற மாநில அளவிலான மாபெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.
வெறும் கோரிக்கை மனுக்களோடு நின்றுவிடாமல், மற்ற குழந்தைகளின் பாதுகாப்பை கருதி நீச்சலைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளராகவும் ரனா மாறியிருக்கிறாள். ராகுல் காந்தி போன்ற தலைவர்களாலும், மாநில அமைச்சர்களாலும் பாராட்டப்பட்டும், அரசுத் தரப்பில் இருந்து இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் அவளது குடும்பத்தினரிடம் உள்ளது.
இப்போது மீண்டும் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், கல்வி அமைச்சரைச் சந்தித்து தனது கோரிக்கையை வலியுறுத்தத் தயாராகிவிட்டாள் இந்தச் சிறுமி. உயிர்காக்கும் நீச்சல் பயிற்சியை ஒரு பாடமாக மாற்ற, எட்டு வயது சிறுமி காட்டும் இந்த விடாமுயற்சி வெற்றி பெறுமா? இவளது குரல் அரசின் செவிகளில் விழுந்து, ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காக்கும் ஒரு கொள்கை முடிவாக மாறுமா? என்று ஒட்டுமொத்த கேரளமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.”
