லெபனானில் இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளநிலையில், அமெரிக்கா- ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது.
லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 4 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழந்தனர். லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை தங்களது தூதுக்குழுவை சுவிட்சர்லாந்திற்கு அனுப்பப் போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுவதாக சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகத்திற்கும் ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தின் ஒபர்கன்னில் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தை திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் புறப்படத் தயாராக இருந்தநிலையில், இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட இடைக்கால உடன்படிக்கையின்படி, லெபனானிலும் போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட போதிலும், நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகளின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே மீண்டும் ஒரு தற்காலிக போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானுடனான அமைதி உடன்படிக்கை மூலம் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும், அணுசக்தி விவகாரங்களுக்கு 60 நாட்களுக்குள் தீர்வு காணவும் அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல், ஒட்டுமொத்த அமைதி முயற்சியையும் பாதிப்படையச் செய்யும் விதத்தில் இருப்பதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
