ஈரான் நாட்டின் தற்போதைய பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியக் குடிமக்கள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்மைக்காலமாக அங்கு நிலவி வரும் சாதகமான சூழல் மற்றும் முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்ட போதிலும், மறு உத்தரவு வரும் வரை இந்தியப் பயணிகள் தங்களது ஈரான் பயணத் திட்டங்களை ஒத்திவைப்பதே நல்லது என்று தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்காக அங்குப் புதிதாகச் செல்லும் இந்தியக் குடிமக்கள் அனைவரும், தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தங்களது முழு விவரங்களையும் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஈரானில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
https://x.com/India_in_Iran/status/2069631904727670841?
மத்திய கிழக்கில் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஈரானும் அமெரிக்காவும் 14 அம்ச அமைதித் திட்டத்திற்குச் சமீபத்தில் ஒப்புதல் அளித்தன. சுவிட்சர்லாந்தில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ், ஈரானுடனான சமீபத்திய பேச்சுவார்த்தைகள் ஒரு இறுதி உடன்படிக்கைக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், முழுமையான அமைதி திரும்பும் வரை இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி இந்தியத் தூதரகம் இந்த திருத்தப்பட்ட பயண ஆலோசனையை வழங்கியுள்ளது.
