கிழக்கு ஆப்பிரிக்க தீவு நாடான செஷெல்ஸுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினியுடன் ஞாயிற்றுக்கிழமை உயர்மட்ட பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார்.
விக்டோரியாவில் உள்ள ஸ்டேட் ஹவுஸ் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், இந்தியா – செஷெல்ஸ் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செஷெல்ஸ் தரப்பில் துணை அதிபர் செபாஸ்டியன் பிள்ளை, மீன்வளம், வேளாண்மை மற்றும் நீலப் பொருளாதாரத் துறை அமைச்சர் வாலஸ் காஸ்க்ரோ, வெளியுறவுத்துறை அமைச்சர் பாரி ஃபோரே, நிதி அமைச்சர் பியர் லாபோர்ட் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இதற்கு முன்பு பிரதமர் மோடியும், அதிபர் ஹெர்மினியும் தனிப்பட்ட முறையிலும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக, ஸ்டேட் ஹவுஸில் பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதிபர் ஹெர்மினி அவரை அதிகாரப்பூர்வமாக வரவேற்றதுடன், இரு நாடுகளின் நெருங்கிய நட்புறவை பிரதிபலிக்கும் பல்வேறு மரியாதை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சனிக்கிழமை விக்டோரியா வந்தடைந்த பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் அதிபர் ஹெர்மினி, அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் நேரில் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியில் குஜராத்தின் கச்ச் பகுதியின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
ஜூன் 27 முதல் 29 வரை நடைபெறும் இந்தப் பயணத்தின் போது, 1976-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நடைபெறும் செஷெல்ஸின் பொன்விழா தேசிய தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
மேலும், தனது பயணத்தின் ஒரு பகுதியாக செஷெல்ஸ் தேசிய தாவரவியல் பூங்காவையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய அடையாளமாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரோந்துக் கப்பல் (PS LESPWAR), 6 ஆம்புலன்ஸ்கள், 10 பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் 5 லேசர் வழிகாட்டி படகுகளை செஷெல்ஸ் அரசிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.
விக்டோரியாவில் உள்ள செஷெல்ஸ் கடலோரக் காவல்படை தளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஹெர்மினி கலந்து கொண்டார். கோவா ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரோந்துக் கப்பல், செஷெல்ஸின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டல (EEZ) கண்காணிப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா – செஷெல்ஸ் இடையேயான மூலோபாய கூட்டாண்மை தொடர்ந்து வலுவடைந்து வருவதற்கான முக்கிய அடையாளமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
