எடப்பாடி பழனிசாமியின் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாகாமல் அதிமுகவை விட்டு வெளியேறுவதாக எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 29-ஆம் தேதி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கரூர் அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்தும் விலகியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் லட்சியப்பாதையிலும், ஜெயலலிதாவின் பேரன்பிலும் அரசியல் பயணத்தைத் தொடங்கி ரத்தமும் சதையுமாக அதிமுகவை முழுமூச்சாகக் கருதி வாழ்ந்தவன் தான் என அறிக்கையொன்றில் கூறியுள்ள எம்.ஆர். விஜயபாஸ்கர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக சந்தித்த அத்தனை நெருக்கடி நேரங்களிலும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி கே. பழனிசாமியின் பின்னால் உறுதியாக நின்றதாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியின் அதிகார அடக்குமுறையால், தன் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டதாகவும், கழக உடன்பிறப்புகள் வாழ்வு சிதைக்கப்பட்டதோடு, தனது குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டடாகவும் தெரிவித்துள்ளார்.
திமுகவின் அத்தனை அராஜகங்களையும் தூள்தூளாக்கி, செந்தில் பாலாஜியின் அதிகார மமதையை வீழ்த்தி கரூரில் மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியவன் தானும் தன்னுடன் துணைநின்ற கழக உடன்பிறப்புகளும் என்பது நாடறியும் எனக் கூறியுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
இத்தனை தியாகங்களுக்கும், நான் சுமந்த வேதனைகளுக்கும் இன்று தனக்குப் பரிசாகக் கிடைத்திருப்பது நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்.

இத்தனை ஆண்டுகள் யாரை எதிர்த்து, யாருடைய மக்கள் விரோத, அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும் ரணங்களையும் நம் உடம்பில் ஏந்தினோமோ…இன்று அதே தீய சக்திகளுடன் கைகோர்த்து, அவர்கள் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு தன் மனம் ரத்தக் கண்ணீர் வடிப்பதாகவும், தீய சக்தி என்று அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திமுக-வுடன், இந்த அண்ணா திமுக எப்படி கைகோர்க்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த அந்தச் சமரச முடிவைத்தான் எதிர்த்தோமே தவிர, அவரது தலைமைக்கு எதிராக நின்றதில்லை எனவும், ஆனால், எடப்படி பழனிசாமி எடுத்த தன்னிச்சையான முடிவுதான் இன்று ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளதாகவும், இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாகத் தயாராக இல்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த இயக்கத்திற்காக தன் உழைப்பையும், தன் வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்துவிட்டதாகவும், இன்று, இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுவதாகவும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
