தனியார் பள்ளிகளின் சொத்துகளை கையாள்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டப்பிரிவை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏராளமான தனியார் கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில் அதன் மாநில பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் தாக்கல் செய்துள்ள வழ்க்கில், 2018ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் 30வது பிரிவு ஒவ்வொரு தனியார் பள்ளியும் தனது சொத்துக்களை மாற்றுவதற்கு, அடமானம் வைப்பதற்கு, பிணையம் வைப்பதற்கு அல்லது வேறுவிதமாகக் கையாளுவதற்கு முன்பு பள்ளிக் கல்வித் துறையிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்றும், ஒருவேளை அனுமதியின்றி செய்யப்படும் எந்தவொரு பரிவர்த்தனையையும் செல்லாதது ஆகிவிடும் என்றும் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தங்களின் சொந்த சட்ட விதிகளால் அல்லது அவை நிர்வகிக்கப்படும் சங்கங்கள் அல்லது அறக்கட்டளைகள் அல்லது நிறுவனங்களால் நடத்தப்படும் தனியார் பள்ளிகளின் சொத்து விவகாரங்கள் மீது கல்வித் துறைக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை; கல்வி நிறுவனத்தின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்கிறதா என்பதை ஒரு கல்வி அதிகாரி தீர்மானிப்பது என்பது உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை மீறுவதாக உள்ளது; தமிழக அரசின் இந்த சட்டப் பிரிவு சொத்துரிமை மாற்றுச் சட்டம், இந்திய ஒப்பந்தச் சட்டம், பதிவுச் சட்டம் மற்றும் சர்ஃபாசி சட்டம் ஆகியவற்றுக்கு முரணானது மட்டுமல்லாமல், குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றதாகக் காட்டப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் இ.விஜய் ஆனந்த் ஆஜராகி வாதிட்டார்.
அவரது விரிவான வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மத்திய மாநில அரசுகளின் சட்டத்துறை, தமிழக பள்ளிக் கல்வித் துறை, தமிழக தனியார் பள்ளிகள் இயக்குனர் உள்ளிட்டோர் நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
