கரூரில் நிகழ்ந்த பெருந்துயரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் ஆவேசமான பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட திமுக முடிவு செய்துள்ளது. தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
நேற்று நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு இருக்கிறது. அதை முடிக்காமல் விடமாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், “காவல்துறையைப் பயன்படுத்தி கரூர் மக்களை கொன்று குவித்தீர்களே ஸ்டாலின் சார்” என முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரடியாக விமர்சித்தார். திமுகவின் செயல்பாடுகளால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அப்பாவி மக்கள் பலியானதாகக் குற்றம்சாட்டிய அவர், அந்தச் சம்பவத்துக்கான பொறுப்பை திமுக ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“கரூர் மக்களின் கண்ணீரால்தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வியை சந்தித்தார்” எனக் கூறிய ஆதவ் அர்ஜூனா, வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரங்களிலும் திமுக நெரிசலை உருவாக்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டினார். விஜயின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு திமுக தடையை ஏற்படுத்தும் வகையில் 14 மாவட்டங்களில் சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதனாலேயே சில இடங்களுக்கு விஜய் செல்லாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். கடலூர் பிரச்சாரத்தையும் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணையில் இருப்பதால், அமைச்சரின் கருத்துகள் விசாரணையை பாதிக்கும் வகையில் உள்ளதாக திமுக மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். எனவே, இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திமுக தீவிரம் காட்டி வருகிறது. தவெக தரப்பில் இந்தப் பேச்சு கரூர் மக்களுக்காகவும், நீதிக்காகவும் எழுப்பப்பட்ட குரல் என்று நியாயப்படுத்தப்படுகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான இந்த மோதல் வரும் நாட்களில் தமிழ்நாடு அரசியலை இன்னும் சூடுபிடிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
