அண்மையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களை சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேரில் சந்தித்து 2 மணி நேரமாகப் பேசினார். இதன்பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார்.
முதலமைச்சருடனான சந்திப்பு குறித்து விராலிமலை டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறுகையில்,
|தவெகவில் இணைந்த எங்கள் ஒவ்வொருவரையும் அழைத்து நலம் விசாரித்து, கட்சி துண்டை அணிவித்து, உறுப்பினர் அட்டையை அளித்து முதலமைச்சர் விஜய் அன்பை வெளிப்படுத்தியது மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. 2 மணி நேரமாக இந்த சந்திப்பு நடந்தது.
அதிகாரத்தில் நாட்டை ஆள்வது என்பது வேறு; மக்களின் அன்பை வெல்வது என்பது வேறு.
இன்றைக்கு சாமான்ய மக்களின் அன்பை வென்றிருக்கக்கூடிய, மாற்றத்தின் சக்தியாக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தலைமைப் பண்புடன் எல்லோரையும் தாயுள்ளத்தோடு அரவணைக்கிற முதலமைச்சரின் இந்த நிகழ்வு நெகிழ்ச்சிக்குரியது.
இனி எந்த தேர்தல் வந்தாலும் எல்லா தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும்.
புரட்சித்தலைவி அம்மாவிடம் பாடம் பயின்ற நாங்கள் அதே மிஷனோட, தவெகவின் வெற்றிக்கு உழைப்பது, பங்கெடுப்பது, ஒத்துழைப்பது என பணிகளில் ஈடுபடுவோம்.
தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக, அதிமுக கவர்னரிடம் புகார் மனு அளித்திருப்பது தொடர்பான கேள்விக்கு, எதிர்க்கட்சிகள் இப்படித்தான் அரசியல் செய்யும் எனக் கூறினார்.
மாமல்லபுரத்தில் நடந்த இணைப்புவிழா குறித்து அசத்திட்டீங்க என முதலமைச்சர் பாராட்டியதாகவும் குறிப்பிட்டார்.
தவெக வாஷிங்மெஷின் தொடர்பான கேள்விக்கு விடையளித்த உடுமலை ராதாகிருஷ்ணன், இந்தியா முழுவதும் வாஷிங் மெஷின் எங்கெல்லாமோ போய்க் கொண்டிருப்பதாகவும், ஏதாவது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார். ஆளும்கட்சியாக இருந்தால் எதிர்க்கட்சிகள் மீது வழக்கு போடுவது வழக்கம். எந்த வழக்கு வந்தாலும் எந்த அரசியல்வாதியும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். அதேபோல் நாங்களும் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை சந்திக்கத் தயாராகவே இருப்பதாகக் கூறினார்.
அவர்களோடு இருக்கும்வரை நல்லவர்கள் என்பதும், வெளியேறிவிட்டால் துரோகிகள் என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என விமர்சித்தார்.
