நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து, பல்வேறு முறைகேடுகள் மற்றும் காரணங்களைக் காட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் வெவ்வேறு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு 5 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வேட்பாளர் மிலானி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதேபோல் கன்னியாகுமரி: அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் மகேஷ், ராயபுரம்: தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமு வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சுபேர் கான், குளித்தலை: திமுக எம்.எல்.ஏ. சூரியனூர் ஏ.சந்திரன் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் ஜி.பாலசுப்ரமணி, புதுக்கோட்டை: திமுக எம்.எல்.ஏ. வி.முத்துராஜா வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் கே.எம்.ஷெரீப் வழக்குகள் விசாரணைக்கு வந்தன:
இந்த 5 வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஜி.அருள்முருகன், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
நீதிபதி என்.செந்தில்குமார் அமர்வு முன்பு 6 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகளில் வெற்றி பெற்று, பின்னர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து தவெக மதியழகன் தாக்கல் செய்த வழக்கு, சி.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுகவின் கே.கே.செல்லப்பாண்டியன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தன.
மேலும், லால்குடி: அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்டின் வெற்றியை எதிர்த்து திமுக பாரிவள்ளல், திருக்கோவிலூர்: அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பழனிசாமி வெற்றியை எதிர்த்து பரணி பாலாஜி, விழுப்புரம்: திமுக எம்.எல்.ஏ. ஆர்.லக்ஷ்மணன் வெற்றியை எதிர்த்து தவெக என்.மோகன்ராஜ், விக்கிரவாண்டி: பாமக எம்.எல்.ஏ. சி.சிவக்குமார் வெற்றியை எதிர்த்து தவெக ஏ.வியஜவடிவேல் ஆகியோரின் வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மனுதாரர்களுக்கு கால அவகாசம் வழங்கியதோடு, எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
நீதிபதி டி.கோவிந்தராஜன் திலகவதி அமர்வு முன்பு 6 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. முன்னாள் அமைச்சர் மற்றும் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. சி.வி.கணேசன் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் ஏ.ராஜசேகர் தொடர்ந்த வழக்கு உட்பட 6 வழக்குகள் இந்த அமர்வில் விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.கோவிந்தராஜன் திலகவதி, மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அவகாசம் அளித்து, எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்குகளை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
