ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அவற்றின் முக்கிய மூலப்பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது.
இதனால், டிஸ்ப்ளே திரைகள், லித்தியம்-அயன் பேட்டரி செல்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்ப பாகங்களுக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி செலவு குறையும். எனவே, உற்பத்திச் செலவும் குறைந்து, இந்திய மின்னணு உற்பத்தித் துறை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரிவிலக்கு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வரிவிலக்கு 2029 மார்ச் 31 வரை செல்லுபடியாகும்.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்திற்கு இது கூடுதல் வலுசேர்க்கும் என்றும், இறக்குமதிச் சார்பைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்றும் அரசு நம்புகிறது.
இந்த நடவடிக்கை சுங்க வரி நடைமுறைகளை எளிமைப்படுத்துவதோடு, லித்தியம்-அயன் பேட்டரி, மின்சார வாகனங்கள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் ட்ரோன் உற்பத்தித் துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
