வியட்நாமின் பு குவோக் தீவுப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தென்சீனக் கடல் பகுதியில் அமைந்துள்ள வியட்நாமில், பிரபல சுற்றுலா இடமான பு குவோக் தீவுப் பகுதிக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் 32 பேர் படகு சவாரி மேற்கொண்டுள்ளனர். படகு ஊழியர்கள் 4 பேர் என 36 பேர் சென்றுள்ளனர். இந்தநிலையில், கடலில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டநிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், படகு விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த 3 பேர், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ஒருவர், தருமபுரி சேர்ந்த ஒருவர் என தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆந்திராவை சேர்ந்த 3 பேரும், கேரளாவை சேர்ந்த 2 பேரும் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், விபத்து குறித்த விவரங்களைச் சேகரித்து, உயிரிழந்தவரின் உடலைத் தாயகத்திற்குக் கொண்டு வருவதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
