நீண்ட இழுபறிக்குப் பிறகு, தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது வெளியாக வேண்டியது. தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் சிக்கல்களால் பல மாதங்களாக முடங்கி இருந்தது. தற்போது அனைத்துச் சட்ட ரீதியான தடைகளும் நீக்கப்பட்டு, படத்திற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் பரிந்துரைத்த 13 காட்சிகளை நீக்கிவிட்டு, படக்குழு வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது.

குறிப்பாக, விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சி தொடர்பான மறைமுகக் குறியீடுகள் வசனங்கள், சில அரசியல் ரீதியான உரையாடல்கள் மற்றும் வன்முறைக் காட்சிகள் மியூட் அல்லது நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகப் விஜய் பொறுப்பேற்ற பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் காணொளிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு படம் வெளியாகவிருப்பது, திரையுலகிலும் ரசிகர்களிடையேயும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
