பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்பாள் வளைகாப்பு உற்சவம் 4-ம் திருநாளான இன்று (ஜூலை 12) நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, காந்திமதி அம்பாளுக்குப் பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டன. வெண்பட்டு உடுத்தி அம்பாள் சன்னதி மகா மண்டபத்தில் எழுந்தருளிய காந்திமதி அம்பாளை, மங்கள வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க, பல்வேறு வகையான சீர்வரிசை தட்டுகளுடன் சுவாமி சன்னதிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அங்கு சுவாமி சன்னதியில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
அதன் பின், ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய காந்திமதி அம்பாளுக்குச் சந்தனம், ஜவ்வாது, சந்தனாதி தைலம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு ‘நலுங்கு வைக்கும்’ வைபவம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
நலுங்கு நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காந்திமதி அம்பாளுக்குப் புதிய வஸ்திரங்கள் சாத்தப்பட்டு, கைகளில் பல வண்ண வளையல்கள் அணிவிக்கப்பட்டு வளைகாப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் அம்பாளுக்குப் பிரம்மாண்ட மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது
.இந்தக் காட்சியைக் காண்பதற்கும், அம்பாளின் அருளைப் பெறுவதற்கும் நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். வளைகாப்பு முடிந்ததும் பக்தர்களுக்கு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
