கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருந்த மிகப்பெரிய முதலீட்டு வெளியேற்றத்திற்குப் பிறகு, இந்திய சந்தையில் வெளிநாட்டு முதலீடு மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் ₹49,340 கோடி, மே மாதத்தில் ₹32,963 கோடி, ஏப்ரலில் ₹60,847 கோடி, மார்சில் ₹1.17 லட்சம் கோடி வரை முதலீடு வெளியேறியிருந்தது. இந்த நிலையில், ஜூலை மாதத்தில் இதுவரை ₹15,157 கோடி அந்நிய முதலீடு இந்திய பங்குச் சந்தைக்குள் வந்துள்ளது.
காரணம் என்ன?
உலகளவில் AI (செயற்கை நுண்ணறிவு) சார்ந்த பங்குகளில் அதிக முதலீடு செய்திருந்த நிதிகள், தற்போது மதிப்பீடு கவர்ச்சியாக உள்ள இந்திய சந்தையை நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளன.
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம், இந்திய பங்குகளில் அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு தற்போது குறைவாக இருப்பதால், வரும் மாதங்களில் மேலும் முதலீடு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக லார்ஜ்கேப் (Large Cap) பங்குகள் மற்றும் வங்கிப் பங்குகள் அதிக முதலீட்டை ஈர்க்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் சிப் (Chip) துறையில் ஏற்பட்ட பலவீனம் காரணமாக, முதலீட்டாளர்கள் இந்தியா போன்ற நீண்டகால வளர்ச்சி வாய்ப்புள்ள சந்தைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த வாரங்களில் மேற்காசிய பதட்டம் குறைந்து காணப்பட்டதாலும், கச்சா எண்ணெய் விலை சரிவுடைந்ததாலும், நிறுவனங்களின் லாபம் மேம்படத் தொடங்கியது போன்ற காரணங்களும் இந்திய சந்தைக்கு சாதகமாக உள்ளன.
