தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவின் (DVAC) இயக்குனர் அ.அருண் ஐபிஎஸ், பதவியேற்ற சில நாட்களிலேயே அதிரடியாக மாற்றப்பட்டு, தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளி இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. சி.மகேஸ்வரி இப்பதவியைக் கூடுதலாகக் கவனிப்பார் என உள்துறைச் செயலர் அறிவித்துள்ளார். த.வெ.க அரசு அமைந்தவுடன் வழங்கப்பட்ட இந்த மிக முக்கியப் பொறுப்பிலிருந்து அருண் திடீரென தூக்கியடிக்கப்பட்டதன் பின்னணியில் அடுக்கடுக்கான அதிரடிச் சர்ச்சைகளும், கடுமையான குற்றச்சாட்டுகளும் ஒளிந்திருக்கின்றன.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பதவியேற்றவுடன், சென்னை முன்னாள் காவல் ஆணையரான அருண் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டது முதலே அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியது. கடந்த திமுக ஆட்சியில் த.வெ.க-வின் ரோடு ஷோ போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்துக் கறார் காட்டிய ஒரு அதிகாரிக்கு, ஊழலை ஒழிக்கும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவி வழங்கப்பட்டதற்குத் த.வெ.க தொண்டர்களிலேயே அதிருப்தி நிலவியது. மேலும், விசிக தலைவர் திருமாவளவன் பரிந்துரையின் பேரில் தான் அருணுக்கு இப்பதவி வழங்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையை, திருமாவளவன் அண்மையில் மறுத்திருந்தார்.
இந்தச் சூழலில், அண்மையில் எ.வ.வேலு உள்ளிட்ட சில முக்கிய திமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனைகளை நடத்தியது. ஆனால், இந்த மெகா ரெய்டுகளில் எதிர்பார்த்தபடி பெரிதாக எந்தவொரு ஆவணங்களோ அல்லது பணமோ சிக்கவில்லை. இதனால், “ரெய்டு நடப்பதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்குத் துறை ரீதியான தகவல்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டன” என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டு அரசு வட்டாரத்திலும், அரசியல் தளத்திலும் வெடித்தது. இந்தத் தகவல் கசிவு விவகாரம் த.வெ.க தலைமைக்குக் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ‘சவுக்கு’ சங்கர் உள்ளிட்டோர் மீது இவர் ‘குண்டாஸ்’ சட்டத்தைப் பழிவாங்கும் நோக்கில் தவறாகப் பயன்படுத்தியதாகச் சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் இவருக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தது. “பழிவாங்கும் உள்நோக்கத்துடன் குண்டாஸ் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பழக்கமுடையவர்” என்று நீதிமன்றம் இவரைச் சாடியதோடு, உயரிய தார்மீகத் தகுதியுடையவர்கள் அமர வேண்டிய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் நாற்காலியில் இவரை அமர்த்தியது தகாது என்ற விமர்சனங்களும் எழுந்தன.
நீதிமன்றத்தின் குட்டு, முன்னாள் அமைச்சர்களின் ரெய்டு தகவல் கசிந்த விவகாரம் மற்றும் கூட்டணிச் சர்ச்சைகள் என நாலாபுறமிருந்தும் எழுந்த முட்டுக்கட்டைகளால் த.வெ.க அரசுக்கு ஏற்பட்ட கடும் நிர்வாக நெருக்கடியே, இறுதியாக இன்று அருணின் அதிரடி இடமாற்றத்திற்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
