தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், அது தொடர்பாக அவர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், தாங்கள் எந்தவொரு குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கில் தங்களது பெயர்கள் இடம்பெறாதபோது, எந்த அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல்துறைக்கு அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி, ’35 clause(3) BNS’ பிரிவின் கீழ் தங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்றும், விசாரணைக்கு ஆஜராகும்போது தங்களை வேறு எந்த வழக்கிலும் கைது செய்யக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளனர். தான் ஒரு மக்கள் பிரதிநிதி மற்றும் தொழிலதிபர் என்பதால், தனது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்போது தங்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அக்கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், கரூர் மாவட்டத்தில் நடந்த 41 பேர் உயிரிழப்பு விவகாரத்தில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் தன்னைத் தொடர்புபடுத்தி மிரட்டும் தொனியில் பேசுவதாகவும், தனது ஆதரவாளர்களைக் காவல்துறை அநாவசியமாகத் துன்புறுத்துவதாகவும் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் தரப்பின் இந்த நிபந்தனைகளால் அதிருப்தி அடைந்துள்ள திருவல்லிக்கேணி போலீசார், அவர்களை விசாரணைக்கு அழைக்க ’35 clause(3) BNS’ நோட்டீஸ் வழங்குவது குறித்தோ, அல்லது நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாகக் கூறி இவர்களது முன் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவது குறித்தோ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
