போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், அந்த ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த மாதம் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா முற்றிலுமாகச் சிதைத்துவிட்டதாகவும், ஈரான் துறைமுகங்கள் மீது மீண்டும் கடல்வழித் தடையை விதித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர்க்கால சூழலில் தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஹார்முஸ் ஜலசந்தியின் முழு கட்டுப்பாட்டையும் ஈரான் தனது வசம் கொண்டுவருவதாக ஈரான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி அறிவித்துள்ளார். பொதுவாக ஓமன் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் கட்டுப்பாட்டில் இந்த ஜலசந்தி இருக்கும் நிலையில், இனி ஓமனின் பகுதி உட்பட ஒட்டுமொத்த ஜலசந்தியையும் ஈரான் தனது இறையாண்மையின் கீழ் கொண்டு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவுடன் இனி எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளைத் தாக்கும் மிரட்டலை விடுத்துள்ளார். குறிப்பாக, ஈரானின் எண்ணெய் வளத்தின் மையமான ‘கர்க் தீவை’ (Kharg Island) அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் தடையைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் மற்றும் அமெரிக்க படைகளுக்கு இடையே மீண்டும் துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளைக் குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அரேபிய கடலில் ஏற்கனவே 19 அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுமையான போரை நோக்கி நகருமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
இந்த ஜலசந்தி வழியாகத்தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ள இந்த மோதல், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
