நீலகிரி மாவட்டம் கூடலூர் கணியம் வயல் கிராமத்தில் உலா வந்த காட்டு யானைமிடமிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்தவரும், சாலையில் நடந்து சென்ற இருவரும் நூலிழையில் உயிர்தப்பித்தனர்.
கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் காணப்படுவது மக்களிடையே நாள்தோறும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தேவர் சோலை கணியம் வயல் கிராமத்திற்குள் இரவில் நுழைந்த காட்டு யானை ஒன்று சாலையில் வேகமாக நடந்து வந்தது. அப்போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்தவர் யானையை கண்டதும் இருசக்கர வாகனத்தை சாலையிலே போட்டுவிட்டு யானையிடமிருந்து தப்பிக்க வேகமாக ஓடி நூலிழையில் உயிர்தப்பினார்.
அந்தக் காட்டு யானை அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சாலையில் திடீரென சென்றதால், எதிரே நடந்து வந்த இருவர் யானையைப் பார்த்ததும் அலறி அடித்து ஓட்டம் பிடித்து உயிர்தப்பினர். .
கணியம் வயல் கிராமத்தில் இரு வேறு இடங்களில் யானை உலா வந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்தவரும் சாலையில் நடந்து வந்த இருவர் என மூன்று பேர் யானையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
