நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து நாடாளுமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது டெல்லி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சேர்ந்து பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மாணவர்கள் தொடர்பான விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி வழங்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவை, எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் சந்தித்து கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
அதற்கு, அரசின் கருத்தை கேட்ட பிறகே முடிவு எடுக்க முடியும் என்று சபாநாயகர் தெரிவித்ததாகவும், “நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கூட அரசிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று சபாநாயகர் கூறுவது வருத்தமளிக்கிறது” எனவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போலீசார் மேற்கொண்ட தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை நடவடிக்கையை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, “மாணவர்கள் இவ்வாறு தாக்கப்படுவது முற்றிலும் இந்தியப் பண்புக்கு எதிரானது. நேற்று நடந்த சம்பவத்திற்காக பிரதமர் மோடி இதுவரை மன்னிப்புக் கூட கேட்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறையில் நிலவும் குறைபாடுகளுக்காகவே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறிய அவர், “நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறை முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். இந்த அமைப்பை கரையான் அரித்தது போல உள்ளிருந்து சிதைத்துவிட்டனர். அதைத்தான் மாணவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்” என்றார்.
மேலும், “இதில் தவறு எதுவும் இல்லை. இந்த விவகாரம் குறித்து பலமுறை எடுத்துரைத்தும் பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்? மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு, மாணவர்களை போலீசார் தாக்கும் இந்த செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “ஆம், அவர் பதவி விலக வேண்டும். ஆனால் மாணவர்களை தாக்கியது தர்மேந்திர பிரதான் அல்ல; உள்துறை அமைச்சர் அமித் ஷாதான். எனவே அவர் பதவி விலக வேண்டும். உள்துறை அமைச்சர் பிரதமருக்கே பொறுப்பானவர் என்பதால், பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்தார்.
