தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை குறித்து முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் இருந்து ரங்கேகவுண்டன்புதூர் மற்றும் வீரப்பகவுண்டனூர் வரை இயக்கப்பட்டு வந்த இரண்டு அரசு பேருந்துகளின் சேவை, கேரள எல்லை வரை நீட்டிக்கப்பட்டது. இந்த புதிய வழித்தட பேருந்து சேவையை அமைச்சர் விக்னேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், மாநில அரசு பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

அப்போது டாஸ்மாக் கடைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், முதல் கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக கூறினார். தற்போது இதுபோன்ற இடங்களில் இன்னும் செயல்பட்டு வரும் கடைகளை ஆய்வு செய்து, அவற்றையும் கட்டமைப்பு ரீதியாக மாற்றியமைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக விவசாயிகள் முன்வைத்து வரும் “கள் இறக்க அனுமதி” கோரிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் வழிகாட்டுதலின்படி அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
கள் இறக்க அனுமதி தொடர்பாக விவசாயிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் நிலையில், அமைச்சர் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் அரசின் அடுத்தகட்ட முடிவு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
