டெல்லியில் CJP சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன. இந்தநிலையில், பெல்லட் துப்பாக்கிச் சூடும் நடந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
பெல்லட் துப்பாக்கியால் பாதிக்கப்பட்ட சாஹில் என்ற இளைஞருடன் ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அவருடைய முகம், கழுத்து, கைப் பகுதியில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அமைதியாக போராடிய இந்த இளைஞரின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக ராகுல் குறிப்பிட்டார். தேசத்தின் நலன் மற்றும் எதிர்காலத்தின் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதனிடையே பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தகவல்களை டெல்லி காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்களிடம் அத்தகைய ஆயுதங்கள் இல்லை என்றும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் போலியானவை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில், போராட்டம் நடந்த போது வன்முறையைக் கட்டுப்படுத்தவே காவல்துறை நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. பெல்லட் துப்பாக்கிகள் அல்லது ஆணிகள் பொருத்தப்பட்ட தடிகள் பயன்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ள மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பீரோ, இந்தச் செய்திகளை ‘போலி’ என வகைப்படுத்தி உறுதிப்படுத்தியுள்ளது.
உலோகம், ரப்பர் அல்லது ஈயத்தால் செய்யப்பட்ட சிறிய குண்டுகள் Pellets எனப்படுகின்றன. ஒருமுறை சுட்டால் பல சிறிய குண்டுகள் ஒரே நேரத்தில் சென்று தாக்குதல் நடத்தி பாதிப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் உடலின் முக்கிய பாகங்களில் இந்த குண்டுகள் தாக்கினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால், இந்த பெல்லட் துப்பாக்கி பயன்பாட்டிற்கு மனித உரிமை அமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
