சிவகாசி அருகே சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளநிலையில், 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி செங்கமலப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இன்று (ஜூன் 26) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. இந்தநிலையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தின் எதிரொலியாக, சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது, கீழ திருத்தங்கல் பகுதியில் முறையான அனுமதியின்றி தகர செட் அமைத்து சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அதிரடி சோதனையின் போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் பட்டாசு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
